பேராசிரியை நிர்மலா தேவியை 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி ..!

981

பேராசிரியை நிர்மலா தேவியை 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மாணவிகளை தவறான வழியில் தள்ள முயற்சித்து தொடர்பாக அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தமிழக காவல்துறையினரிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனிடையே நிர்மலா தேவியை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில் சாத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை சாத்தூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், பேராசிரியை நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து அவரை தமிழக காவல்துறையினர், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது, மகளிர் அமைப்பினர், வழக்கறிஞர்கள், பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனிடையே, நிர்மலா தேவி வழக்கில் இருந்து விலகுவதாக அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.