இலங்கை விடுவித்த 77 மீனவர்கள் காரைக்கால் வருகை

256

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேரும் நேற்று இரவு காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்.
கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களில் 77 பேர் நல்லெண்ண அடிப்படையில், கடந்த 25ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனையடுத்து, விடுவிக்கப்பட்ட 77 பேரும் அழைத்து வரப்பட்டு, சர்வதேச கடல் எல்லையில், இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து, மீனவர்கள் அனைவரும் நேற்று இரவு சுமார் பத்தரை மணியளவில் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர். 77 மீனவர்களையும் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் காரைக்கால் துறைமுகத்தில் வரவேற்றனர்.
77 மீனவர்களில் காரைக்கால் பகுதி மீனவர்களை அவர்களுடைய குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்துச்சென்றனர். இதனைத்தொடர்ந்து, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளைச்சேர்ந்த மீனவர்கள் தனி வேன்களில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.