இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில், கொத்துக் குண்டுகள் வீசப்பட்ட உண்மை அம்பலமாகியுள்ளது. இது இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

274

கிளஸ்டர் எனப்படும் கொத்துக் குண்டுகளுக்கு சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை உள்நாட்டுப் போரின்போது, சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொத்துக் குண்டுகளால் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை இலங்கை அரசு தொடர்ந்த மறுத்து வந்தது.

இந்நிலையில் இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளை வீசியது உண்மைதான் என்று பிரிட்டனைச் சேர்ந்த தி கார்டியன் நாளிதழ் புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனையிறவு மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து மீட்கப்பட்ட கொத்து குண்டுகளின் 42 பாகங்களின் படங்களை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது. மேலும் போரின்போது, தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராகவும், அமைச்சர் சரத் பொன்சேகா ராணுவ தளபதியாகவும் இருந்தனர் என்றும் அந்த நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது.

தற்போது, ஐ.நா. சபையின் மனித உரிமைகள் மாநாடு நடைபெற்று வரும் நிலையில், இலங்கை பிரச்சினை குறித்த விவாதம் நாளை நடைபெறவுள்ளது. எனவே இந்த விவகாரம், இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.