இலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு !

286

இலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நடைபெற்றிருப்பது அந்த நாட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கொழும்பு நகரில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 359 பேர் பலியாகினர். உலக நாடுகளை உலுக்கிய இந்த கொலைவெறி தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதிலும் இருந்து 50-க்கும் மேற்பட்டோரை இலங்கை அரசு அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை செய்ததாக இலங்கையை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாஷிமுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து. இலங்கை முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து இருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் கொழும்புவில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புகோடா நகரில் சிறிய அளவிலான குண்டு வெடித்துள்ளது. நீதிமன்ற கட்டடத்திற்கு பின்பகுதியில் குண்டுவெடிப்பு நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.