நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு : இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு

70

நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழுவை அமைப்பது என இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந்தேதி அதிரடியாக நீக்கினார். பின்னர் முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார். ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்த சிறிசேனா ஜனவரி 5-ந்தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த நீதிமன்றம் சிறிசேனா பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்தது. இதற்கிடையே கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடியபோது ராஜபக்சே அரசுக்கு எதிராக 2 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டிலுமே ராஜபக்சே தோல்வி கண்டார்.

இதைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண அதிபர் சிறிசேனா அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை கூட்டினார். இது தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில் நேற்று இலங்கை நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது ராஜபக்சே அரசு மீது மீண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த எதிர்பார்ப்பும் இன்றி வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழுவை அமைப்பது என இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக துணை சபநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்தார். இதனால், இலங்கை அரசியலில் அசாதாரண சூழல் தொடர்ந்து நீடித்து வருகிறது.