தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூரத் தாக்குதல்..!

240

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரைக் இலங்கைக் கடற்படையினர் கொடூரமாகத் தாக்கி, கடலில் தூக்கி வீசி எறிந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 25 பேர் 6 படகுகளிலும், மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 60 மீனவர்கள் 16 படகுகளிலும் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தடுத்துள்ளனர். இதனால் தமிழக மீனவர்களுக்கும், இலங்கைக் கடற்படையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினர். 3 பேரை நடுக்கடலில் தூக்கி வீசினர். மேலும், 20 படகுகளில் இருந்த 45 மீனவர்களைப் பிடித்து சென்றுள்ளனர். அவர்களின் 20 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட மீனவர்களிடம் இலங்கைக் கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுக்கடலில் தூக்கி எறியப்பட்ட 3 மீனவர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இலங்கைக் கடற்படை வீரர் ஒருவரை சிறைப் பிடித்து கோட்டைப்பட்டினத்திற்கு அழைத்து வந்த, தமிழக மீனவர்கள் அவரை மறைத்து வைத்துள்ளனர். கடற்படை வீரரை விடுவித்தால், தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிப்பதாக இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைத்து வைத்துள்ள இலங்கைக் கடற்படை வீரரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனால், பதற்றம் அதிகரித்துள்ளது