தமிழக மீனவர்கள் 8 பேர் கைது | இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி

275

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச்சென்றனர். நெடுந்தீவு இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த அவர்களை, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசியும், கண்ணாடி பாட்டில்களை வீசியும் விரட்டியத்தனர். மேலும், வலைகளை அறுத்து எறிந்தும், பத்துக்கும் மேற்பட்ட படகுகளை சேதப்படுத்தியும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். மேலும், வெறி அடங்காத அவர்கள் தமிழக மீனவர்கள் எட்டு பேரை சிறைபிடித்து சென்றனர். இதனால் உயிர் பிழைத்தால் போதும் என மீனவர்கள் அவசர அவசரமாக கரைதிரும்பினர். இலங்கை கடற்படையின் தாக்குதலால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.