நடிகை ஸ்ரீதேவியின் இறுதி சடங்குகள் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும்..!

716

துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்படுகிறது. நாளை காலை 11 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உறவினர் திருமணத்திற்கு துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. ஸ்ரீதேவி மது அருந்தி இருந்தது ரத்த பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில், ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு செல்ல துபாய் போலீசார் இன்று பிற்பகல் அனுமதி வழங்கினர். சட்ட நடைமுறைகள் நிறைவு பெற்றதால், ஸ்ரீதேவி வழக்கை துபாய் போலீசார் முடித்து வைத்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு, விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்கு பிறகு, நாளை காலை 11 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.