பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.

825

பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.
தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிப் படங்களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 4 வயதில் தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி, பாலிவுட் படங்களிலும் தனித் திறமையின் மூலம் தன்னை முன்நிலைப் படுத்திக் கொண்டார். 16 வசீகர அழகின் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ஸ்ரீதேவி, 6 பிலிம் பேர் விருதுகளும், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருதும் பெற்றுள்ளார்.
ரஜினி, கமல் உள்ளிட்ட உட்ச நட்சத்திரங்களுடன் அதிக படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடனும் நடித்து இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஸ்ரீதேவி என்றால் அது மிகையாகாது.
இந்தநிலையில், துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகை ஸ்ரீதேவி, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 11 மணிக்கு உயிரிழந்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்ரீதேவி உயிரிழந்த போது அவரது கணவர் போனி கபூர், மகள் குஷி உள்ளிட்டோர் உடனிருந்ததாக தெரிகிறது. இந்த தகவலை ஸ்ரீதேவியின் மைத்துனர் சஞ்சய் கபூர் உறுதி செய்துள்ளார். மேலும், துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று பிற்பகலுக்குள் மும்பை கொண்டு வரப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.