சென்னை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை

291

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.

கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய 11வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து முதலில் களம் இறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் 47 ரன்களும், யூசூப் பதான் 45 ரன்களும் எடுத்தனர்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டுபிளெசியுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வாட்சன் 51 பந்துகளில் 8 சிக்சர்கள், 7 பவுண்டரிகளை விளாசி சதமடித்தார். ஆட்டத்தின் முடிவில் 57 பந்துகளில் 117 ரன்களை குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் வாட்சன். இறுதியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை அணி 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. வெற்றி பெற்ற சென்னை அணிக்கு ஐபிஎல் கோப்பையுடன் ரூ.20 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.