தென்மேற்கு பருவமழை வலுவடைய தொடங்கியது! மராட்டியத்தில் கனமழை!!

289

தென்மேற்கு பருவமழை வலுவடைய தொடங்கியுள்ளது. தற்போது மராட்டியத்திற்கும்,  மத்திய இந்தியாவிற்கும் பரவியது.

இந்தியாவின் உயிர் நாடியாக இருப்பது தென்மேற்கு பருவமழை. இது பொய்த்து விட்டால் விவசாய வீழ்ச்சி ஏற்பட்டு பொருளாதாரமும் பாதிக்கப்படும். விலைவாசியும் உயரும்.

கடந்த ஆண்டு இந்த பருவமழை குறைவாக பெய்தது. அதனால் பருப்பு உள்ளிட்ட தானியங்களின் உற்பத்தி குறைந்து விலை ஏற்றம் ஏற்பட்டது.

இந்த ஆண்டு பருவமழை குறித்த காலத்தில் தொடங்கும் என்றும், சராசரி அளவு பெய்யும் என்றும் முன்னறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால், வழக்கமாக தொடங்க கூடிய ஜூன் ௧–க்குப் பதிலாக ௮–ம் தேதி தான் கேரளாவில் மழை தொடங்கியது.

ஒரு சில நாள் மட்டுமே பலமாக பெய்து பின்னர் ஓய்வெடுத்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. இப்போது சற்று வடக்கு நோக்கி விரிவடைந்து மராட்டியத்திலும், மத்திய மாநிலங்களிலும் பெய்யத் தொடங்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் மராட்டியத்தின் விதர்ப்பா பகுதியில் நேற்று முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம்,  சத்திஸ்கர், தெலுங்கானா, ஜார்க்கண்ட, பீகார் ஆகிய மாநிலங்களுக்கும் மழை விரிவடைந்துள்ளது.

இது மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த மாத மத்தியில் இந்தியா முழுமையையும் ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் வழக்கமாக ஜூலை ௧–ம் தேதி மழை தொடங்கும் இந்த ஆண்டு ஒரு வாரம் கழித்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.