வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம் தகவல்

949

வடமேற்கு வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 13ம் தேதி வலுப்பெறும் என்பதால் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியாவில் கடந்த மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் கேரளா, கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வந்தது. தமிழகத்தை பொறுத்தவரையில், தென் மாவட்டமான நெல்லை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், சென்னைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே வடமேற்கு வங்க கடல் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது என்று கூறியுள்ள இந்திய வானிலை மையம், இது வரும் 13ம் தேதி வலுப்பெற்று கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. மேலும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.