காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆரவார வரவேற்புக்கிடையே சோனியா காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

143

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆரவார வரவேற்புக்கிடையே சோனியா காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் நேற்று பலத்த கரகோஷங்களுடன் எம்பிக்களாக பதவி ஏற்றனர். அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி ரானி எம்பியாக பதவியேற்ற போது பாஜக எம்.பி.க்கள் எழுப்பிய கரகோஷத்தால் நாடாளுமன்றமே அதிர்ந்தது. அதைத் தொடர்ந்து இன்றும் பஞ்சாப் , தமிழ்நாடு உள்ளிட்ட மாநில எம்பிக்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ஆங்கில எழுத்து வரிசைப்படி ஆந்திரா, அசாம் என மாநில வாரியாக எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். டி ஆர் பாலு, கனிமொழி, உள்ளிட்ட தமிழக மக்களவை உறுப்பினர்கள் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அவர்கள் பதவியேற்றபோது பெரியார், அண்ணா, கருணாநிதி, தமிழ், திராவிடம், மார்க்ஸியம், எம்ஜிஆர் போன்ற வார்த்தைகளை உச்சரித்து முழக்கமிட்டனர்.

இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியாகாந்தி எம் பி யாக பதவியேற்றார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மேஜைகளை தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.