பெரியார், அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்..!

282

பெரியார், அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, காலியாக உள்ள பொறுப்பாளர்கள் பதவிக்கு நிர்வாகிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றிக்கான வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-க்கு அதிமுக செயற்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிமுக செயற்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் போஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை வென்ற தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதவிர, பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.