மாணவி சோபியாவுக்கு ஜாமீன் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு..!

336

பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் கைது செய்யப்பட்ட மாணவி சோபியாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். அப்போது சோபியா என்ற மாணவி, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார். இதையடுத்து, தமிழிசைக்கும் மாணவி சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சோபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார். ஆனால் சோபியா மறுத்துவிட்டார். இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே சோபியா மீது கொடுக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறக் கோரி திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டியில் அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சோபியாவை விடுதலை செய்யக் கோரி தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மாணவி சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான மனுவை விசாரித்த நீதிமன்றம் பொது இடத்தில் இனி இவ்வாறு பேசக் கூடாது என்று அறிவுரை கூறி ஜாமீன் வழங்கியுள்ளது.