நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த சிறிசேனா திட்டம்..!

65

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அந்த பதவியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி நியமித்தார். அன்றிலிருந்து இலங்கை அரசியலில் தினமும் அதிரடி திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன. ராஜபக்சேவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வி அடைந்ததால் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடத்துவதாக சிறிசேனா அறிவித்தார். இதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. மேலும் தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் முடக்கி வைத்துள்ளது.

ஆனால் ரணில் விக்ரமசிங்கேவும், ராஜபக்சேவும் பிரதமர் பதவிக்கு உரிமை கோரி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 117 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இதன் மூலம் பிரதமராவதற்கு தனக்கு முழுத்தகுதி உள்ளது என்பதை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் நிரூபித்துள்ளார்.