சிங்கள குடியேற்றங்கள் மூலம் தமிழர் அடையாளங்களை அழிக்க திட்டம்-இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

415

சிங்களர் குடியேற்றங்கள் மூலம் தமிழர் அடையாளங்களை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இவ்வாறு தெரிவித்தார். மேலும், வடக்கு மாகாணப் பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் இலங்கை அரசின் புதிய அரசியலமைப்பு இருக்கலாம் என்றும், இதன் மூலம், தமிழர்களின் தனித்துவ அடையாளங்கள் அடுத்த 20 வருடங்களில் அழிக்கப்பட்டுவிடும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் சுயாட்சி போன்ற அம்சங்கள் இலங்கை அரசின் புதிய அரசியலமைப்பில் இடம்பெற வாய்ப்பில்லை என்றே தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இதே கருத்தை இலங்கை எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தனும் தெரிவித்துள்ளார். மகாவலி தண்ணீர் வடக்கு பகுதிக்கு வரவில்லை என்றும், ஆனால் அந்த திட்டத்தின் பெயரால், தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களர்கள் குடியேற்றப்படுவதாகவும் சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.