சமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு

107

பொய்யான தகவல்கள், புரளிகள், வதந்திகளை பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது.

சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது 5 கோடியே 12 லட்சம் ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை சிங்கப்பூர் அரசு கொண்டு வந்துள்ளது. சமூகவலைதளங்களில் கிளம்பும் புரளிகளை கட்டுப்படுத்தவே இந்த அதிரடி சட்டத்தை சிங்கப்பூர் அரசு கையில் எடுத்துள்ளது. இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய சிங்கப்பூர் சட்ட உள்துறை அமைச்சர் சண்முகம், இணையத்தில் உலா வரும் வதந்திகள் உண்மையை தகர்த்தெறிவதாக குறிப்பிட்டார். சொந்த விருப்பு வெறுப்பிற்காக சிலர் வேண்டுமென்றே பரப்பும் வதந்திகள் சொந்த நாட்டை மட்டுமின்றி, பிற நாடுகளையும் பாதிப்பதாக அவர் கவலை தெரிவித்தார். எனவே தான் அதனை முற்றிலும் ஒடுக்கும் வகையில், சமூக வலைதளங்களில் பரவும் பொய் செய்திகளை சட்டரீதியாக எதிர்கொள்ள புதிய சட்டத்தை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.