ஷீலா தீட்சித் மறைவுக்கு அரசியல்கட்சி தலைவர்கள் இரங்கல்..!

130

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவையொட்டி ராகுல்காந்தி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல்கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டெல்லி மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு ராகுல்காந்தி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல்கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ஷீலா தீட்சித் காங்கிரஸ் கட்சியின் மகள் என்றும், அவருடன் தனிப்பட்ட முறையில் பல ஆலோசனை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், டெல்லி மக்களுக்கும் இரங்கலை தெரிவித்துள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதே போல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், டெல்லியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியவர் ஷீலா தீட்சித் என புகழாரம் சூட்டியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ஷீலா தீட்சித் முதல்வராக பணியாற்றிய காலத்தில் டெல்லி வளர்ச்சியடைந்ததாகவும், அவரது செயல் என்றும் நிலைத்து இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஷீலா தீட்சித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரியங்கா காந்தி, ஷீலா தீட்சித் மிகவும் அன்பானவர் எனவும், டெல்லிக்கு அவர் ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார். ஷீலா தீட்சித்தின் மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சிக்கும், நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு எனவும் பிரியங்கா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதே போல் ஷீலா தீட்சித் மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒமர் அப்துல்லா, மதிமுக பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.