சென்னை மந்தவெளியில் நியாய விலை கடை பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் ஆய்வு!

147

மந்தைவெளிபாக்கம் மகளிர் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக்கடையில் மின்னணு நிர்வாக முறையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்கான பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு செய்தார்.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மந்தைவெளிபாக்கம் மகளிர் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக்கடையில் மின்னணு நிர்வாக முறையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்காக விற்பனை முனை எந்திரம் நிறுவும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு
மந்தைவெளிபாக்கம் மகளிர் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடையில் மின்னணு நிர்வாக முறையில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிப்பதற்காக நடைபெற்று வரும் பணிகள், நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, மின்னணு தராசு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அத்தியாவசியப் பொருட்களின் தரம் மற்றும் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா ஏழை எளிய மக்களின் பசிப்பிணி போக்கும் மகத்தான திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை, 1.85 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரும்பணியினை கூட்டுறவுத் துறை சார்ந்த 32,514 நியாயவிலைக் கடைகள் மேற்கொண்டு வருகின்றன. கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுவிநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் முறையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழுமையாக சென்றடையும் வகையிலும், நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் இருப்பு விவரங்களை பொதுமக்கள் நேரடியாக தெரிந்துக் கொள்வதற்கும் ஏதுவாக நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை மின்னணு நிர்வாக முறையில் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், முதற்கட்டமாக 13 மாவட்டங்களில் நியாயவிலைக் கடைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பணி
சென்னை மாவட்டத்தில், இத்திட்டம் செயல்படுத்துவதற்காக சோதனை அடிப்படையில் 21 கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் உட்பட 29 நியாயவிலைக் கடைகளில் முதற்கட்டமாக விற்பனை முனை எந்திரம் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு விவரங்கள் அனைத்தும் நேரடியாக பொதுமக்கள் தெரிந்து குடும்ப அட்டைக்கான பொருட்களை முழுமையாக பெற்றுச் செல்வதற்கும், எவ்விதமான முறைகேடுகளுக்கு இடம்தராத வகையிலும் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.யூ.சி.எஸ். காமதேனு சுயசேவைப் பிரிவு மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடையினை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின்போது, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ரா.பழனிசாமி, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ், கூடுதல் பதிவாளர் த.ஆனந்த் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்