திண்டுக்கல்லில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை தனது வீட்டு வேலைகளைச் செய்ய வைத்த தனியார் பள்ளி ஆசிரியரைக் கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆரோக்கிய மாதா தெருவில் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கே சுமார் 350 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி மரிய நந்தினியை பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் ஜெய ஆரோக்கிய செல்வம் தனது வீட்டு வேலைகளைச் செய்ய வைத்துள்ளார். இதற்கிடையே மரியநந்தினி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 4 நாள் விடுமுறைக்கு பிறகு பள்ளி சென்றுள்ளார். அப்போது ஆசிரியர் ஜெய ஆரோக்கிய செல்வம், நான்கு நாட்களாக தனது வீட்டு வேலைகளைச் செய்ய வராததால் பள்ளிக்கு வரவேண்டாம் என்றும் வீட்டிற்கே திரும்பிச் செல்லும்படியும் கூறியுள்ளார்.

இதுகுறித்து நந்தினி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உதவித் தலைமை ஆசிரியர் ஜெய ஆரோக்கிய செல்வம் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.