தமிழகம், புதுச்சேரியில் 8ஆம் தேதி வரை கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

368

கன மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பையடுத்து புதுச்சேரி, நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 8-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக 7-ஆம் தேதி மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இதே போல் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி, மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மற்றும் தேனியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.