ரஞ்சன் கோகோய்க்கு எதிரான பாலியல் புகார் விவகாரம் : 3 பேர் அடங்கிய குழு விசாரிக்க உத்தரவு

252

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிரான பாலியல் புகார் விவகாரத்தை, எஸ்.ஏ. போப்டே தலைமையில், 3 நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயது பெண் செக்ஸ் புகார் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், இதில் பெரிய அளவில் சதி இருப்பதாக கருத்து தெரிவித்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் உத்சவ் சிங் பெயின்ஸ் என்ற வழக்கறிஞர் ஒரு பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் அதிர்ச்சியைத் தருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தலைமை நீதிபதிக்கு எதிராக பெரிய சதி நப்பதாகவும், இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கூறி உள்ளார்.

இதை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று உத்சவ் சிங் பெயின்ஸ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு அடுத்து, மூத்த நீதிபதியாக திகழும் எஸ்.ஏ.போப்டே தலைமையில், 3 பேர் அடங்கிய குழு, பாலியல் புகார் விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போப்டே தலைமையில், நீதிபதிகள் என்.வி, ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய குழுவினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.