ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அத்தனை மனுக்களும் இன்று விசாரணைக்கு வரஉள்ளன.

235

ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அத்தனை மனுக்களும் இன்று விசாரணைக்கு வரஉள்ளன.
தமிழக மக்களின் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில், காளைகள் கொடுமைப்படுத்தப்படுவதால், அதற்கு தடை விதிக்கக்கோரி, பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பும், விலங்குகள் நல வாரியமும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 2009-ல் தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு விதிமுறைகள் சட்டத்தின்படி பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும் பீட்டா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு விதிமுறைகள் சட்டத்தை ரத்து செய்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2016-ஆம் ஆண்டு காளைகளை காட்சிப் பட்டியலில் இருந்து நீக்குவதாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை எதிர்த்தும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதனிடையே, ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, மத்திய அரசின் ஒப்புதலின்படி மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டுவந்தது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அத்தனை மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.