உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரபரப்பு குற்றச்சாட்டு..

298

உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்று பணியில் உள்ள 4 நீதிபதிகள் குற்றம்சாட்டி இருப்பது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதிகள் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்று, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளான செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக பேச வேண்டிய கட்டாயம் தங்களுக்கு ஏற்பட்டதாக தெரிவித்த அவர்கள், உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்று குறிப்பிட்டனர். இதே நிலை நீடித்தால், ஜனநாயகம் நிலைக்காது என்று கூறிய நீதிபதிகள், தலைமை நீதிபதிக்கு தாங்கள் கொண்டு சென்ற விவகாரங்கள் தோல்வியில் முடிந்ததாக வேதனை தெரிவித்தனர்.

பணியில் உள்ள நீதிபதிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலுடன், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் ஆலோசனை நடத்தி உள்ளார். இதனிடையே, நீதிபதிகள் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
————