இலவச உணவு வழங்கப்படுகிறது சவுதி அரேபியாவில் வேலையின்றி தவிக்கும் 10,000 இந்தியர்களை மீட்க ஏற்பாடு! 2 மத்திய அமைச்சர்கள் விரைந்தனர்!!

219

சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பை இழந்ததால் பரிதவிக்கும் 10,000–க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு, இந்திய அரசின் ஏற்பாட்டின் பேரில் இலவச உணவு வழங்கப்படுகிறது. அவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வெளியுறவுத்துறை இணை மந்திரிகள் வி.கே.சிங், எம்.ஜே.அக்பர் ஆகியோர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வேலை வாய்ப்பு தேடி இந்திய இளைஞர்கள் குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கில் செல்கிறார்கள். சில கம்பெனிகள் மட்டுமே செம்மையான முறையில் வேலைவாய்ப்பை வழங்குகின்றன. மற்ற கம்பெனிகள் சிறிது காலம் வேலைவாய்ப்பு அளித்துவிட்டு மோசடி செய்துவிடுகின்றன.
டிடென்ஷன் கேம்ப்
இதனால் அந்நிய தேசத்தில் நிராதரவாக தவிக்கும் நிலைக்கு இந்திய இளைஞர்கள் தள்ளப்படுகின்றனர். வேலைவாய்ப்பின்றி, உணவில்லாமல், அடிப்படை வசதிகளுக்கு கூட அல்லாடிக் கொண்டிருக்கும் அவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அவர்கள் தங்கியிருக்கும் இடம் குவாசி டிடென்ஷன் கேம்ப் போல இருக்கிறது என்று கூறப்படுகிறது. அவர்கள் நரக வேதனையை அனுபவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஜெட்டா நகரில் வேலை இழந்து தவிக்கும் 800 இந்தியர்கள் கடந்த சில நாள்களாக உணவில்லாமல் தவித்து வந்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு டுவிட்டர் மூலம் இந்தியத் தொழிலாளர்களில் ஒருவர் தகவல் அனுப்பினார். இதையடுத்து, இந்தியத் தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும்படி ரியாத்தில் இருக்கும் இந்தியத் தூதரகத்துக்கு சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் சுஷ்மா சுவராஜ் பதிவிட்டுள்ளதாவது:–
வி.கே.சிங், எம்.ஜே.அக்பர்
சவுதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளில் பணிக்கு சென்ற நமது சகோதர, சகோதரிகள் ஏராளமானோர், தாங்கள் பணிபுரிந்த ஆலைகள் மூடப்பட்டுவிட்டதால், வேலையை இழந்து விட்டனர். இந்தியர்களை வேலையில் அமர்த்தியவர்கள், அவர்களுக்கு ஊதியமும் வழங்கவில்லை. இதனால், சவுதி அரேபியா, குவைத் நாடுகளில் இந்தியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
குவைத் நாட்டில் இருக்கும் இந்தியர்களின் நிலவரம் சமாளிக்கும் வகையில் உள்ளது. சவுதி அரேபியாவில்தான் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் வேலையிழந்து தவிக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும்படி, ரியாத்தில் இருக்கும் இந்தியத் தூதரகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு, சவுதி அரேபியாவுக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் விரைந்துள்ளார். மற்றொரு வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர், இந்த விவகாரம் குறித்து சவுதி அரேபியா, குவைத் நாடுகளின் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். சவுதி அரேபிய நிலவரத்தை தனிப்பட்ட முறையில் நான் கண்காணித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அழைத்துவரப்படுகிறார்கள்
இதுவரை 15,475 கி.கி. உணவுப் பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்லாயிரம் கி.கி. உணவுப் பொருள் விநியோகிக்கப்பட இருக்கிறது. பரிதவிக்கும் 10,000–க்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்க தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. வெகுவிரைவில் இந்தியத் தொழிலாளர்கள் தாய்நாட்டுக்கு அழைத்துவரப்படுவார்கள் என்று கடைசியாக கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.