திமுக உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக சட்டசபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது | சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் ஸ்டாலின் கோரிக்கை

370


திமுக உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக சட்டசபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டசபையில் மின்சார மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக உறுப்பினர் முத்தையா, சட்டசபையில் 89 வயக்காட்டு பொம்மைகள் இருப்பதாகக் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அரைமணி நேரம் வரை நீடித்த இந்த அமளியால் சபையில் பரபரப்பு நிலவியது. அப்போது, பேசிய சபாநாயகர் தனபால், சபையை முறையாக நடத்த திமுக உறுப்பினர்கள் ஒத்துழைக்கவேண்டும் என தெரிவித்தார். ஆனால், திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபையை வியாழக்கிழமை வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இதையடுத்து, சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், முத்தையா பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என முறையிட்டோம், ஆனால் எங்களது கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டார் என்று கூறினார்.

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக சட்டபேரவையில் இன்று சபாநாயகர் தனபாலை கண்டித்து தி.மு.க. வெளிநடப்பு செய்தது. அவைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:–
நாங்கள் சபாநாயகர் தனபாலை கண்டித்து அடையாள வெளிநடப்புதான் செய்துள்ளோம். ஊடகங்களில் வெளிநடப்பு என்று சொன்னவுடன் நாங்கள் தொடர்ந்து அவையை புறக்கணிப்பதாக மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள். நாங்கள் இந்த ஒரு பிரச்சினையை கண்டித்து மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான காரணத்தால் இந்த வெளிநடப்பில் ஈடுபட்டுள்ளோம். இதன் பின்னர் மீண்டும் சென்று அவை நடவடிக்கையில் பங்கேற்போம்.
இன்று மின்சாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இது முக்கியமானத்துறையாகும். ஆனால், சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் மாடத்தில் இல்லை. இதனை எங்கள் கட்சித் துணைத்தலைவர், சபாநாயகரிடம் சுட்டிக் காட்டினார்.உடனே சாடை காட்டி மின்சாரத்துறை அதிகாரிகளை மாடத்திற்கு சபாநாயகர் வரவழைத்தார்.
அவையில் மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு உரிய வசதி இல்லாததால் நான்தான் அவர்களை பக்கத்து அறையில் தொலைக்காட்சி வசதியுடன் இருக்க வைத்தேன் என்று சபாநாயகர் கூறினார்.
இதையடுத்து நாங்கள் சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் நேரடியாக பார்ப்பதற்கான வசதியை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். ஏனென்றால் அவை நடவடிக்கைகளை சில பகுதிகளை வெட்டி விட்டுதான் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படுகிறது.
பாராளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவதால் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகள் எல்லாம் மக்கள் நேரடியாக பார்க்க முடிந்தது. இதற்கு பதிலளித்த சபாநாயகர் இப்பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது என கோரி நான் பேசியவற்றை மட்டும் அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.
நான் பேசியதும் அவைக் குறிப்பில் இருக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டேன். அவர் மறுத்துவிட்டார். அதனால் அதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். மீண்டும் அவை நடவடிக்கையில் பங்கேற்க செல்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே கருத்தை வலியுறுத்தி காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.