மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவு..!

211

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 89.

மக்களவை முன்னாள் சபாநாயகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜி சிறுநீரக பாதிப்பு காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து செயற்கை சுவாசக் கருவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கடந்த 1968ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சோம்நாத் சாட்டர்ஜி 10 முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்தார். பின்னர் மக்களவை சபாநாயகராக 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். 2008ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கான ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்ற நிலையில் மக்களவை சபாநாயகர் பதவியில் இருந்து விலக மறுத்த சோம்நாத் சாட்டர்ஜி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

மறைந்த சோம்நாத் சாட்டர்ஜிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் நாடாளுமன்றத்தில் வலுவான குரலாக விளங்கியவர் சோம்நாத் சாட்டர்ஜி என்று கூறியுள்ளார். சக்திமிக்க அரசியல்வாதியான சோம்நாத் சாட்டர்ஜி ஏழை மக்கள் நலனுக்காக உழைத்தவர் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் என்றும் பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கட்சி எல்லைகளைக் கடந்த அனைத்து மக்களவை உறுப்பினர்களாலும் போற்றப்பட்டவர் சோம்நாத் சாட்டர்ஜி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு இடது சாரி இயக்கங்களுக்கு பேரிழப்பு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தொழிலாளர் வர்க்கத்தின் மிகச் சிறந்த தலைவராகவும் மக்களவை சபாநாயகராகவும் திகழ்ந்த சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு பேரிழப்பு என்று கூறியுள்ளார்.