சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!

222

சென்னை, ஜூலை.25–
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பிறகு, சட்டப்பேரவை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

மு.க.ஸ்டாலின்: இன்று நிதிநிலை அறிக்கையின் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய விவாதத்தில் அதிமுகவை சார்ந்த உறுப்பினர் நரசிம்மன், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பெயரை சொல்லி வேண்டுமென்றே, திட்டமிட்டு எங்களை வம்புக்கு இழுத்து, கோபப்பட செய்ய வேண்டும் என்ற நிலையில் பேசுகிற போது, தி.மு.க. சார்ந்த நாங்கள் அத்தனை பேரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.

இதே சட்டப்பேரவையில் பொன்விழா கண்டு இருக்கக் கூடியவர் கருணாநிதி. ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர், 13-வது முறையாக அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, அவர் சந்தித்த தேர்தல்கள் எதிலும் தோல்வியே அடையாத நிலையில் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி கண்டுள்ள ஒரு மூத்த தலைவரை, 93 வயதை கடந்தும் கடுமையாக பணியாற்றி வரும் எங்கள் தலைவர் கலைஞர் அவர்களின் பெயரை சொல்லி விளித்தபோது, திமுக உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், நானும், சட்டமன்ற திமுக துணைத்தலைவர் சபாநாயகரிடம் ஒரு விளக்கம் கேட்டோம்.
உத்தரவு
அதாவது முன்னாள் முதல்வரான எங்கள் தலைவர் கலைஞர் பெயரை சொல்கின்றபோது, அது தவறில்லை என்று அவர் எங்களுக்கு விளக்கம் தந்தார். உடனடியாக நாங்கள், ”அப்படியென்றால் இப்போது முதலமைச்சராக இருக்கக் கூடிய ஜெயலலிதாவின் பெயரை சொல்லி நாங்களும் பேசலாமா ? அதற்கு நீங்கள் அனுமதி தருவீர்களா”, என்று நாங்கள் அவரிடம் திரும்பி கேட்டோம். உடனே அவர், “அதெல்லாம் முடியாது, முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை சொல்ல அனுமதிக்க முடியாது, இது சபாநாயகரின் உத்தரவு” என்று பதிலளித்தார்.

இங்கு நான் கேட்க விரும்புவது, ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பெயரை சொல்லக் கூடாது என்று எந்தவொரு சட்டமன்ற விதிமுறைகளிலும் இடம்பெறவில்லை. அப்படி இருக்கும்போது ஜெயலலிதாவின் பெயரை சொல்லக்கூடாது என்று சபாநாயகர் தீர்ப்பளிக்கிறார் என்றால், அது நிச்சயமாக அவையின் மரபுக்கு குந்தகம் விளைவிக்க கூடியதாக இருக்கும். எனவே, அவரது தீர்ப்பை கண்டிக்கின்ற வகையில், தி.மு.க. சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்து எங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம்.
உரிமைகள்
கேள்வி: பாலாறு பிரச்சினையில் நீங்கள் நேரடியாக தலைமையேற்று ஒரு போராட்டத்தை நடத்தி இருக்கின்றீர்கள். பொதுவாக பல வழக்குகள் 10-20 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பாலாறு குறித்த வழக்கு ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் ஒரு வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளதே ?

பதில்: காவிரி பிரச்சினையும் நீதிமன்றத்தில் தான் இருக்கிறது, முல்லைப்பெரியாறு பிரச்சினையும் நீதிமன்றத்தில் தான் இருக்கிறது. அதேபோல பாலாறு பிரச்சினையும் நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆகவே, எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவற்றையெல்லாம் பேசித்தான் தீர்க்க வேண்டும். அதுதான் வழிமுறை. அதனால் தான் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, நானும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் மற்றும் மேலும் பல அமைச்சர்களை கருணாநிதியே நேரில் அனுப்பி வைத்திருக்கிறார்.
தீர்மானம்
சம்பந்தப்பட்ட மாநில அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். வழக்கு நீதிமன்றத்தில் ஒருபுறம் இருந்தாலும், நாம் பெற வேண்டிய உரிமைகளை சுமுகமாக பேசி பெற்று வந்திருக்கிறோம் என்பது கடந்த கால வரலாறு. எனவே அதே நிலையை இப்போது அரசு எடுக்க வேண்டும். உடனடியாக ஒரு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழக முதலமைச்சராக இருக்கக்கூடிய ஜெயலலிதா அந்தந்த மாநில முதல்வர்களை சென்று சந்திக்க வேண்டும். இல்லையென்று சொன்னால், சட்டமன்றத்தில் இதுகுறித்து ஒரு தீர்மானத்தை இயற்றிட வேண்டும் என தி.மு.க.வின் சார்பில் நான் எடுத்து வைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.