சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள்- சட்டசபை பொதுக் கணக்குக் குழு இன்று ஆய்வு

326

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது குறித்து கர்நாடக சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் இன்று பெங்களூரு சிறையில் ஆய்வு செய்கின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைத்துறை டி.ஜி.பியாகப் பதவி வகித்து வந்த சத்தியநாராயண ராவ், சகிகலாவிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு, அவருக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுத்ததாக, ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், கடந்த
ஜுலை 21-ம் தேதி நடந்த கர்நாடக சட்டப்பேரவைப் பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்தது உண்மைதான் என்று சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். அப்போது, சிறையில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பது குறித்து 15 நாட்களில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அதற்கான அறிக்கையை இன்று நடைபெறும் பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் சிறைத் துறை அதிகாரிகள் தாக்கல் செய்கின்றனர். அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டபின், பொதுக் கணக்குக் குழு தலைவர் தலைமையிலான குழுவினர், பரப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு நடத்துகின்றனர். சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறையையும் அதிகாரிகள் பார்வையிட உள்ளனர். சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டு, தற்போது அவை அகற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து பொதுக் கணக்குக் குழுவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.