சசிகலா குடும்பத்தார் வீடுகளில் 4-வது நாளாக சோதனை நீடிப்பு!

658

சசிகலா குடும்பத்தினர், ஆதரவாளர்கள் வீடுகளில் நான்காவது நாளாக சோதனை நீடித்துவரும் நிலையில், 300 பேருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் கடந்த 4 நாட்களாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் தினகரன் ஆதரவாளர்களிடமிருந்து பல்வேறு ஆவணங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களை 20 ஆடிட்டர்கள் மூலம் 50 பேர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இதுதொடர்பாக, 300 பேருக்கு மேல் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, வருமான வரித்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்மன் அனுப்பியவர்களிடம் நாளை முதல் நேரடி விசாரணை நடைபெறும் என்றும் தெரிகிறது. இந்த விசாரணைக்கு பின்னர் சசிகலா மற்றும் தினகரனிடம் இறுதி கட்ட விசாரணை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.