புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

392

புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் சசிகலா புஷ்பா, திமுக எம்.பி., திருச்சி சிவாவை தாக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, அவரை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்து பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இந்த நிலையில், காண்ட்ராக்ட் வாங்கி தருவதாக இருபது லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ராஜேஷ் என்பவர் நெல்லையில் புகார் அளித்தார். இதனடிப்படையில் சசிகலா புஷ்பா மீது
மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சமயத்தில், பானுமதி என்பவர் தானும் தனது அக்கா ஜான்சிராணியும் தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் வீட்டு வேலை பார்த்து வந்ததாகவும், அப்போது சசிகலாவின் கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் தங்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளநிலையில், பானுமதி, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது பெண்கள் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.