சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்ட விவகாரம் : நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை.

244

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்தது குறித்து, தகவல் தெரிவித்த கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாகவும் சசிகலா மீது புகார் எழுந்தது. மேலும், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது என்றும், தகவல்கள் தெரிவித்த கைதிகளை வேறு சிறைக்கு மாற்றி, அவர்களை சிறைத்துறை அதிகாரிகள் தாக்கியதாக செய்திகள் வெளியாகின.இந்தநிலையில், கர்நாடக மாநில மனித உரிமை ஆணையம், தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதுதொடர்பாக, ஆணையத்தின் ஐ.ஜி. சோமேந்து முகர்ஜி, சிறையில் நேரடியாக விசாரணை நடத்தி, 72 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அதில், சிறைகளில் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை கொண்டு, சிறையில் சில கைதிகள் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.