தண்டனை காலத்துக்கு முன்னதாக சசிகலா விடுவிக்க வாய்ப்பு இல்லை என கர்நாடக ஐ.ஜி ரூபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

207

தண்டனை காலத்துக்கு முன்னதாக சசிகலா விடுவிக்க வாய்ப்பு இல்லை என கர்நாடக ஐ.ஜி ரூபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்தது தொடர்பாக, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 4 பேரும் மேல்முறையீடு செய்த வழக்கில் அவர்களை விடுதலை செய்து கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விடுதலைக்கு எதிராக கடந்த 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் சசிகலா, இளவரசி சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மூன்று பேரும் கடந்த 2017 பிப்ரவரி 15-ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கர்நாடக ஐ.ஜி. ரூபா, குற்றவாளிகளின் நன்னடத்தையின் அடிப்படையில், தண்டனை காலம் முடிவதற்கு முன்னர் விடுதலை செய்ய விதிமுறை உள்ளது என்றார். ஆனால், சசிகலா வழக்கை பொறுத்தவரை, அந்த விதிமுறைக்குள் வராது என்றும், எனவே தண்டனை காலத்துக்கு முன்னதாகவே, அவரை விடுவிக்க வாய்ப்பு இல்லை எனவும் ஐ.ஜி ரூபா திட்டவட்டமாக கூறினார்.