குட்கா ஊழல் விவகாரத்தில் திடீர் திருப்பம் : குட்கா ஊழலில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தொடர்பு?

448

குட்கா ஊழல் விவகாரத்தில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ தரப்பில் இருந்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

குட்கா ஊழல் குறித்த கிடங்கு உரிமையாளர் மாதவ்ராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை டிஜிபி ஏ.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடு உட்பட 35 -க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. ஜார்ஜ் வீட்டில் நடைபெற்ற சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், அவரது கூட்டாளி உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை அதிகாரி என்.கே.பாண்டியன் மற்றும் இ்டைத்தரகர் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

அவர்களை வருகிற 20-ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில், குட்கா ஊழல் விவாகரத்தில் சசிகலாவுக்கும் தொடர்பு இருக்க கூடும் என கருதுவதால் சிபிஐ புதிய கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. எனவே, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பர் 17ம் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலா அறையில் இருந்து குட்கா ஊழல் பற்றி ரகசிய கடிதம் ஒன்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.