சம்பா சாகுபடிக்கு, மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

133

சம்பா சாகுபடிக்கு, மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் தண்ணீர் திறக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்துவந்த கர்நாடக அரசு உச்சநீதிமன்ற ஆணைக்கும், தமிழகத்தின் எதிர்ப்புக்கும் பணிந்து தண்ணீர் திறந்துவிட்டிருப்பது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் தற்போது கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபிணி அணையிலிருந்து கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் வரை, கடைமடை பாசனப் பகுதிகளுக்கு, மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கர்நாடகாவில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது தொடர்பாக பதற்றம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பேருந்துகள் இரண்டாம் நாளாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கர்நாடகாவில் தமிழர் வாழும் பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக அரசு மேற்கொள்ளவேண்டும் என்றும், தேவைப்பட்டால் துணை ராணுவப்படைகளை அழைத்துவந்து தமிழர்களின் பாதுகாக்காக நிறுத்த வேண்டும் என்று தமது அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.