சென்னை தொழிலதிபர் மீது சேலம் பெண் கூறிய புகாரில் திடீர் திருப்பம்: 3½ வயது குழந்தை கடத்தப்பட்டதாக தாய் நாடகமாடியது அம்பலம்! போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

340

சேலம், ஜூலை 31–
ரூ.1½ கோடி மோசடி குற்றத்தை மறைப்பதற்காக 3½ வயது குழந்தை கடத்தப்பட்டதாக தாய் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி தேன்மொழி. இவர்களது மகள் ஷாமாயாஸ்மின் (வயது 30). பல வருடங்களுக்கு முன்பு சுப்ரமணியும், தேன்மொழியும் இறந்துவிட்டதால் ஷாமாயாஸ்மின் மற்றும் இவரது தம்பி மணிகண்டன் ஆகியோரை சேலம் பெரமனூரை சேர்ந்த உறவினர் ராஜேஸ்வரி என்பவர் வளர்த்து வந்தார். இதனிடையே, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் பகுதியை சேர்ந்த முகமது யூனூஸ் என்பவரை ஷாமாயாஸ்மின் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து கணவன்–மனைவி இருவரும் சென்னை பட்டினம்பாக்கத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு முகமது யாசிப் (வயது 3½) என்ற ஆண் குழந்தை உள்ளது. சென்னையில் முகமது யூனூஸ்–ஷாமாயாஸ்மின் தம்பதி ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், சென்னை பட்டினம்பாக்கம் பகுதியை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் சங்கரிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கினர். மேலும் சங்கரின் நண்பர்கள் மூலமும் ரூ.8 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனாலும் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தையை சென்னையில் விட்டுவிட்டு முகமது யூனூஸ் மட்டும் மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டாராம். அதன்பிறகு, கடனாக பெற்ற ரூ.7 லட்சத்தை திருப்பி தருமாறு சங்கர் தொடர்ந்து ஷாமாயாஸ்மினிடம் கேட்டு வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த 1½ மாதத்திற்கு முன்பு குழந்தையுடன் ஷாமாயாஸ்மினை, சங்கரும் அவரது தரப்பினரும் வீட்டிற்கு அழைத்து சென்று, வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் சங்கருக்கு சொந்தமான வீட்டில் தாய், மகன் இருவரையும் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்ததாகவும். கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்திற்கு சென்று உறவினர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வருமாறு ஷாமாயாஸ்மினை மட்டும் சங்கர் தரப்பினர் அனுப்பி வைத்ததாகவும் சொல்லப்பட்டது.
இந்தநிலையில், உறவினர் ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்த ஷாமாயாஸ்மின், சென்னையில் நடந்த விவரத்தை அவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜேஸ்வரி, ஷாமாயாஸ்மின், இவரது தம்பி மணிகண்டன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் சென்னை பட்டினம்பாக்கம் நம்பிக்கை நகர் பகுதியை சேர்ந்த சங்கர் உள்பட 2 பேர், சென்னையில் எனது குழந்தையை கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.7 லட்சம் கொடுத்தால் தான் மகனை திருப்பி அனுப்புவதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சிறுவனை கடத்தி வைத்திருப்பது சென்னை என்பதால் இது தொடர்பான விவரத்தை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மூலம் சென்னை பட்டினம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஷாமா யாஸ்மின் கொடுத்த புகார் மனுவை சென்னை போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று பட்டினம்பாக்கம் போலீசார், குழந்தையை கடத்தி வைத்ததாக கூறப்பட்ட சங்கரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு குழந்தை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தது. அந்த குழந்தையை போலீசார் மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். வீட்டில் சங்கர் இல்லை.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, சங்கரிடம் ஷாமாயாஸ்மின் தனது கணவர் முகமது யூனூசுடன் சேர்ந்து 7 லட்சம் கடன் வாங்கி கொண்டு ஏமாற்றியது தொடர்பாக பட்டினம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் சங்கர் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளார். அது தொடர்பாக போலீசார் புகார் மனு பெற்றதற்கான ரசீது மட்டும் கொடுத்துள்ளனர்.
வாங்கிய கடனை திரும்ப கேட்டு சங்கர் நெருக்கடி கொடுத்ததும், ஷாமாயாஸ்மின் வீட்டை காலி செய்து விட்டு ரெட்ஹில்ஸ் பகுதிக்கு சென்றதும் அவரை தேடிப்பிடித்து சங்கர், தனது வீட்டிற்கு குழந்தையுடன் அழைத்து வந்துள்ளார். அங்கு குழந்தையை விட்டு விட்டு, தான்மட்டும் சேலத்திற்கு சென்று உறவினர்களிடம் ரூ.7 லட்சம் பணத்தை தயார் செய்து வருவதாக கூறிவிட்டு ஷாமாயாஸ்மின் சேலம் வந்துள்ளார். இதனால், குழந்தையை சங்கர் கடத்தவில்லை என்றும், ஷாமாயாஸ்மினே தனது குழந்தையை அங்கு விட்டு சென்றுள்ளதும், தற்போது குழந்தை கடத்தப்பட்டதாக நாடகமாடி புகார் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் முகமது யூனூஸ்–ஷாமாயாஸ்மின் தம்பதி ஆன்லைன் வர்த்தகம் மூலம் அப்பகுதியில் உள்ள பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு ரூ.1 கோடியே 50 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த தகவலும் தற்போது அம்பலமாகி உள்ளது. அதாவது, குழந்தையை கடத்தியதாக புகார் கொடுத்தால், சங்கர் தன்னையும், குழந்தையும் தொந்தரவு செய்யமாட்டார் என்றும், அதற்குள் பாஸ்போர்ட் எடுத்து கொண்டு மலேசியா சென்று கணவருடன் குடும்பம் நடத்த ஷாமாயாஸ்மின் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.
தற்போது சென்னை பட்டினம்பாக்கம் போலீசார் குழந்தை கடத்தப்பட்டதாக கூறிய வழக்கில் நிதிநிறுவன அதிபர் சங்கரை கைது செய்வதா? அல்லது சங்கர் கொடுத்த பணம் மோசடி குற்ற வழக்கில் ஷாமாயாஸ்மினை கைது செய்வதா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.