எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து | 4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம்

126

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குடிசை வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

எடப்பாடி அருகே உள்ள முண்டாச்சியூர் காட்டுவளவை சேர்ந்தவர் சின்னத்துரை, இவர் புதிதாக வீடுகட்டி வருவதால் அருகில் குடிசை வீடு அமைத்து குடும்பத்துடன் வசித்து வருகின்றார். நேற்று காலை குடிசை வீட்டில் எரிவாயு கசிந்ததால் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. விபத்து ஏற்பட்டபோது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் வீட்டில் வைத்திருந்த 8 சவரன் தங்க நகை உள்பட 4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து பூலாம்பட்டி காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே பல்லாவரத்தை அடுத்த குரோம்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பூபதி என்ற 58 வயது பெண்மணி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவரகள் அவரை மீட்டு 70 சதவிகித தீக்காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.