மக்களவை, உள்ளாட்சி தேர்தல்களை எதிர்கொள்ள அதிமுக தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

324

மக்களவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை எதிர்கொள்ள அதிமுக தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்கட்சியினர் மட்டுமே எதிர்ப்பதாக கூறினார். தான் ஒரு விவசாயி என்பதால், எந்த விதத்திலும் விவசாயம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என கருதுவதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் 40 நான்கு வழிச்சாலைகள் அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதில் 19 சாலைகளுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது என்றார்.

தன்னுடைய உறவினருக்கு வழங்கப்பட்ட டெண்டரில் ஊழல் செய்ததாக கூறுவது பொய்யான தகவல் என தெரிவித்த முதலமைச்சர், ஊழலில் திளைத்த கட்சி திமுக தான் என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநகராட்சிகளுக்கான பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது என்றார். மக்களவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை எதிர்கொள்ள அதிமுக தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.