சபரிமலை பகுதியில் 15 கேன்களில் இருந்த 500 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல்!

811

சபரிமலை பகுதியில் 15 கேன்களில் நிரப்பப்பட்டு இருந்த 500 கிலோவுக்கும் அதிகமான வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், சபரிமலைக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பத்தனம்திட்டா காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, பாண்டித்தாவளம் பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையில், 15 கேன்களில் தலா 35 கிலோ வீதம் வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வெடி மருந்துகள், சபரிமலையில் நடக்கும் வெடி வழிபாட்டுக்கானது எனவும், வெடி வழிபாட்டை ஏலம் எடுத்தவர் அனுமதியின்றி வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, வெடி வழிபாடு ஏலம் எடுத்த திருவனந்தபுரத்தை சேர்ந்த பவனன் சுதீர் என்பவரை கேரள போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.