ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து அதிகாரிகள் ஆலோசனை !

564

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் மாநகர காவல் ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதில் 56 இடங்களில் 256 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும், பணப் பட்டுவாட்டை தடுக்க முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா மூலம் சோதனை மேற்கொள்வது எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
பாதுகாப்பு பணிக்காக 10 கம்பெனிக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும், கண்காணிப்பு பணிக்கு கூடுதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் லக்கானி தெரிவித்தார்.
தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் பொருத்தப்படும் எனவும், அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்றும் அவர் கூறினார்.
விதிமுறை மீறல்கள் தொடர்பாக வாக்காளர்கள் 1950 என்ற இலவச எண்ணிலும், 94441 23456 என்ற வாடஸ் அப் எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் எனவும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.