21 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலை ஒட்டி ஆர்.கே.நகரில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், தினகரன் போன்ற சுயேட்சைகளும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கக்கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், நேற்றைய தினம் தனது ஆதரவாளர்களுடன் ஆர்.கே.நகரில் வீதிவீதியாக சென்று குக்கர் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.
அதே போல், நாம் தமிழர் கட்சி சார்பில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கலைக்கோட்டுதயத்திற்கு வாக்களிக்க கோரி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழரின் பெருமையை காக்க தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.