கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு : ரிசர்வ் வங்கி அறிக்கையில் தகவல்

224

பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதன் பின் புதிதாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த புதிய ரூபாய் நோட்டுகளை கள்ளத்தனமாக தயாரித்து புழக்கத்தில் விடுவது தெரியவந்தது.

இதனை உறுதி செய்துள்ள ரிசர்வ் வங்கி, கடந்த 3 ஆண்டுகளில் அதிகாரிகளிடம் சிக்கிய கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதில் புதிய 500 மற்றும் 2000 ஆயிரம் ரூபாய்களின் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்திருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல 100 ரூபாய் கள்ள நோட்டுகளும் அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கியில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.