மத்திய அரசின் அறிவுரைக்கு பிறகே ரூபாய் நோட்டு தடைக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

105

500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை விதித்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு ரிசர்வ் வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கருப்புப்பணம், தீவிரவாத செயல்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை கருத்தில் கொண்டு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை தடை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசிடமிருந்து கடிதம் வந்ததாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் மத்தியக்குழு ஆலோசித்து இந்த ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் நடவடிக்கை நல்ல திட்டமாக இருந்ததால் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்று, அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ரிசர்வ் வங்கி அளித்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமர் மோடியின் அழுத்தம் காரணமாகவே பழைய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றதாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சவுகதா ராய், ரிசர்வ் வங்கியை தமது கைப்பாவையாக பிரதமர் மோடி பயன்படுத்துவதாக புகார் தெரிவித்தார். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்துக்காக ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனுக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கவில்லை என சவுகதா ராய் சாடியுள்ளார்.