மழை வெள்ளத்தால் நிலைகுலைந்த கேரளா..!

355

மழை வெள்ளத்தால் நிலைகுலைந்த கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. முடக்கப்பட்ட விமான சேவையும் இன்று முதல் தொடங்குகிறது.

வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் 10 நாட்களுக்கும் மேலாக கேரள மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவால் 14 மாவட்டங்கள் நிலைகுலைந்து போனது. உறவுகளையும், உடைமைகளையும் இழந்து மக்கள் தவித்தனர். கடந்த 8–ந் தேதி முதல் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 197 பேர் பலியாகி உள்ளனர். பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மாநில முழுவதும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் 3 ஆயிரத்து 757 மருத்துவ முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்தநிலையில், கேரளாவில் மழையின் தீவிரம் குறைந்ததை அடுத்து, அனைத்து மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து எர்ணாகுளம், கோட்டையம், திரிச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், திருவனந்தபுரம் பகுதிகளுக்கு பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

கொச்சி கப்பல் படை, விமான தளத்தில் இருந்து பயணிகள் விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது. மாநிலத்தில் இயல்புநிலை திரும்பி வருவதை அடுத்து, மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு, மராட்டிய அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கிய நிவாரண பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதைப்போன்று நியூ மங்களூரு துறைமுகத்தில் இருந்து மற்றொரு கப்பலும், விசாகப்பட்டணம் மற்றும் சென்னை வழியாக கடலோர காவல்படை விமானமும் கேரளாவுக்கு விரைந்துள்ளது. இந்த பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து வினியோகிக்கப்பட்டு வருகிறது.