புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் ஓரிரு நாளில் விநியோகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தென்மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா தெரிவித்துள்ளார்.

461

புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் ஓரிரு நாளில் விநியோகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தென்மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு பின்னர் நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம். மையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏடிஎம் மையங்களில் 50, 100 ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி மக்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, நாடு முழுவதும் 100 ரூபாய் நோட்டுக்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு, புழக்கத்திற்கு வந்துள்ளன. இதன் காரணமாக, வங்கிகள் மற்றும் அஞ்சலக மையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதனையடுத்து, ஏ.டி.எம். மையங்களில் குறைந்த பட்ச தொகையாக 100 ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என்ற நிலையில், தற்போது ஏடிஎம் மையங்களில் 50 ரூபாய் நோட்டுக்களையும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி எடுத்துக் கொள்ளலாம் என்றும், புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஒரிரு நாளில் விநியோகம் செய்யப்படும் என்றும், ரிசர்வ் வங்கி தென்மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா அறிவித்துள்ளார்.

திரும்ப பெறப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புதிய வடிவில் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என்றும், அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் மாற்றம் கொண்டுவரப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.