ரிசர்வ் வங்கி கவர்னராக மல்லையாவை நியமிக்கலாம்! காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கிண்டல்!!

359

புதுடெல்லி, ஜூன் 20–

தொழிலதிபர் விஜய் மல்லையாவை ரிசர்வ் வங்கி கவர்னராக மத்திய அரசு நியமிக்கலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.

பாஜக தலைவர்கள் சிலரின் எதிர்ப்பு காரணமாகவே, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மீண்டும் பதவி நீட்டிப்பு பெற விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படும் நிலையில் திவாரி இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னதாக, டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் பணியாற்றுகையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சேத்தன் சவுகானை தற்போது தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின்  தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளதற்கு மணீஷ் திவாரி கண்டனம் தெரிவித்திருந்தார். இதேபோல், புனேவில் உள்ள இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்படக் கல்வி நிலையத்தின் தலைவராக சர்ச்சைக்குரிய நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதையும் திவாரி நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில், “கஜேந்திர சவுகான் முதல் சேத்தன் சவுகான் வரை இந்த அரசால் நியமிக்கப்பட வேண்டியவர்கள் நிறையவே இருக்கிறார்கள். விஜய் மல்லையாவை ரிசர்வ் வங்கி கவர்னராக நியமித்தால் மிகப்பெரிய அனுபவம் கிடைக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.