கவுரிக்கு பாதுகாப்பை வழங்க கர்நாடக அரசு தவறிவிட்டது – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

485

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ்க்கு போதிய பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு தவறிவிட்டதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சில தினங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்திற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் தாக்கவோ, கொல்லவோ படுகின்றனர் என்று கூறினார். இந்தியாவுக்கு எதிரான சித்தாந்தங்களை திணிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பிரதமர் மோடியை குறிவைத்து ராகுல்காந்தி கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று கூறினார். கவுரி லங்கேஷ் கொலையில் விசாரணை தொடங்குவதற்கு முன்பே, ஆர்.எஸ்.எஸ்.சும். பாஜகவும் தான் இதற்கு காரணம் என ராகுல் தீர்ப்பு வழங்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ், பத்திரிகையாளர் கவுரிக்கு போதிய பாதுகாப்பை அளிக்க தவறிவிட்டதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டினார்.