ஹிட்லர் போல நடந்துக்கொள்ள வேண்டாம் : அதிபர் சிறிசேனவுக்கு ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை

64

ஹிட்லர் போல நடந்துக்கொள்ள வேண்டாம், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இலங்கை அதிபர் சிறிசேனவுக்கு ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்தவும் சிறிசேனா உத்தரவிட்டார். ஆனால் அதிபரின் உத்தரவுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க முடியாது என்று சிறிசேனா பிடிவாதமாக கூறி வருகிறார்.

இதுதொடர்பாக பேசிய ரணில் விக்கிரமசிங்கே, அரசாங்கத்தில் உள்ள அனைவரும் அரசியல் சட்டத்தை காக்க வேண்டுமே தவிர, அரசியலமைப்புடன் யாரும் விளையாட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். சிறிசேன ஹிட்லர் போல நடந்துக்கொள்ளக் கூடாது என்று கூறிய ரணில் விக்கிரமசிங்கே, நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்றால் அதை சட்டப்பூர்வ அரசுதான் முடிவு செய்யவேண்டும் என்று தெரிவித்தார், அதிபர் சிறிசேனா நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கூறிய அவர், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ளார்.