தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்..!

1499

தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார். நாட்டின் 6 குடியரசு தலைவர்களை உருவாக்கிய பெருமை கொண்டது சென்னை பல்கலைக்கழகம் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 160வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
அப்போது பேசிய அவர், சென்னை பல்கலைக்கழகம், இந்திய பல்கலைக்கழகங்களின் தாயாக விளங்குகிறது என்றார். நாட்டின் 6 குடியரசு தலைவர்களை உருவாக்கிய பெருமை கொண்டது சென்னை பல்கலைக்கழகம் என கூறிய அவர், தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி என்றும், தமிழர்கள் பிற மாநிலத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாக புகழாரம் சூட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவை கல்வித்தாய் என புகழ்ந்தார். நடப்பு நிதியாண்டில் உயர்கல்வித்துறைக்கு 4 ஆயிரத்து 620 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நாட்டிலேயே அதிக உயர்கல்வி நிறுவனங்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.